அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் கருதி, கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2வது அமர்வு செவ்வாய்க்கிழமை (10) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் பிரச்சினைகளுக்கும், அந்த மக்கள் எமது சபையினூடாக எதிர்பார்க்கின்ற விடயங்கள் வீன்போகாத வகையிலும் குறிப்பாக அப்பிரதேசத்தில் வாழுகின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் இந்த சபையினூடாக தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என திடமாக நம்புகின்றேன்.
புதிய முறையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களில் 25வீதமான பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நியதிக்கமைவாக இந்த சபையின் உறுப்பினராக இருந்துகொண்டு உரையாற்றக் கிடைத்தமையினையிட்டு சந்தோசமடைகின்றேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோருக்கும் இந்த உயரிய சபையிலே எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களை இனங்கண்டு பிரதேச சபையின் உச்ச அதிகாரத்தினை பயன்படுத்தி அந்தப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த சபையிலே இரு அணிகளாக நாம் பார்க்கப்பட்டாலும், நாம் சம பலத்தோடு இந்த சபையிலே இருக்கின்றோம், ஆகவே, இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி நலன்கருதி கட்சி பேதங்களை மறந்து பணியாற்ற சகலரும் முன்வர வேண்டும்.
அட்டாளைச்சேனை அறபா வீதி, சரீப் ஹாஜியார் வீதி, கப்பலடி வீதி என்பன கடந்த சில தினங்களாக காபட் இடப்பட்டு வருகிறது. இவ்வீதிகளினாலே அதிகமானோர் நாளாந்தம் பிரயாணம் செய்து வருவதும் வழக்கமாகும். குறித்த வீதிகள் அந்தப்பகுதியின் பிரதான வீதிகளாகவும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீதிகளில் விபத்துக்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே, மேற்குறிப்பிடப்படும் வீதிகளில் அதிக வெளிச்சத்தை தரக்கூடிய தெருமின் விளக்குகளை விரைவில் பொருத்துவதற்கு சபையினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், எமது பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற வடிகான்கள், முறையாகவும், திட்டமிடப்பட்ட வகையிலும், பொருத்தமான இடங்களிலும் அமைக்கப்படவில்லை. அவைகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை பயனற்றதாகவே காணப்படுகிறது. அந்த வடிகான்களை உடைத்து எறிகின்ற நிலைமைகளும் தற்போது காணப்படுகிறது. வடிகான்களை அமைக்கின்ற போது எமது சபை மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக மழை காலங்களில் கோணாவத்தை பிரதேசத்தில் உள்ள அதிகமான வீதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் பாடசாலை செல்கின்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, மக்களின் போக்குவரத்திற்கு உகந்தவாறு வீதிகள் செப்பனிடப்பட வேண்டும்.
அத்துடன், கோணாவத்தை பொது நூலகத்திற்கு வாகனத்தரிப்பிடம் ஒன்றை அமைத்துத்தருமாறு வாசகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நூலகத்திற்கு தினமும் வருகின்ற வாசகர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை வீதியின் இரு பகுதியிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வீதியினால் பயணிப்போர் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு நூலகத்திற்கு அருகாமையில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் வாகனத்தரிப்பிடம் ஒன்றை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment