அட்டாளைச்சேனை மீலாத்நகரில் 1997ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி தேசிய மீலாத் விழாவின் நிமிர்த்தம் இந்த சனசமூக நிலையக் கட்டிடமும், சிறுவர் பூங்காவும் நிர்மாணிக்கப்பட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபினால் குறிப்பிட்ட தினத்தில் திறந்து வைக்கப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் மக்கள் பாவனைக்கு அன்றைய தினம் வழங்கப்பட்டது.
தற்போது பல வருடங்களாக இக்கட்டிடமும், சிறுவர் பூங்காவும் பாரமரிப்பற்று இருந்ததனால் மேலும் சேதமடைந்து பாம்புப் புற்றுகளும் புற் பூண்டுகளும் வளர்ந்து கால்நடைகள் தங்குகின்ற தலமாகவும் பல்வேறுபட்ட தீய செயற்பாடுகள் நடைபெறும் இடமாகவும் தற்போது காணப்படுகின்றது.
இது விடயமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்குப் பலமுறை தெரிவித்திருந்தும் இதுவரையும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
குறிப்பாக, மாலை நேரங்கிளில் பல பிரதேசங்களிலிருந்து வருகை தருகின்ற இளைஞர்கள் இக்கட்டிடத்திற்குள் பிரவேசித்து சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் பல அநாச்சார செயல்களிலும் ஈடுபடுவதுடன் எதிரே உள்ள பாடசாலைகுள் நுழைந்து மது வெறியின் காரணமாக மதுசார போத்தல்களை கட்டடத்தினுள் அடித்துடைத்தும் ஆபத்துகள் ஏற்படும் வகையிலும் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தவிசாளர், உபதவிசாளர் மற்றும் புறத்தோட்ட வட்டாரத்தின் பிரதேச சபையின் உறுப்பினர் இவ்விடயத்தைக் கவனத்திற் கொண்டு கைவிடப்பட்ட நிலையிலுள்ள சனசமூக நிலையத்தையும், சிறுவர் பூங்காவையும் மீளவும் புனரமைத்து மக்கள் பாவனைக்கு விரைவாக வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.



0 comments:
Post a Comment