அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் பிறிமீயர் லீக் - 2018 சம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டியில் Al-Naja Boost அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் 20வது ஆண்டு பூத்தியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (27) கோணாவத்தை கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் அல்-நஜா பூஸ்ட் மற்றும் அல்-நஜா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அல்-நஜா பூஸ்ட் அணியினர், அல்-நஜா கிங்ஸ் அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தனர்.
இதற்கினங்க, முதலில் துடுப்பெடுத்தாடிய அல்-நஜா கிங்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் முடிவில் 4விக்கட்டுக்களை இழந்து 59ஓட்டங்களை பெற்றனர். அந்த அணியின் வீரர் சஹான் 25ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
60ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அல்-நஜா பூஸ்ட் அணியினர் 4.1ஓவர் முடிவில் 2விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 60ஓட்டங்களை பெற்று வெற்றியினை தனதாக்கிக்கொண்டனர். அந்த அணியின் வீரர் நஜாத் 5சிக்ஸர்களை விளாசி 37ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதிப் போட்டியின் போது 37ஓட்டங்களை பெற்ற அல்-நஜா பூஸ்ட் அணியின் வீரர் நஜாத் இறுதிப் போட்யின் சிறப்பாட்டக்காரராகவும், அதே அணியினைச் சேர்ந்த எப்.ஹலீம் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இச்சுற்றுப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அப்ராஸ் மற்றும் பந்து வீச்சாளராக ஹலீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் அல்-நஜா பிறிமியர் லீக் ஞாபகார்த்தமாக இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட சகல வீரர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் அந்த அணியின் இளம் வீரர்கள் 15பேரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் பிரதம அதிதியாகவும், சமூக சேவையாளரும், அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகருமான எம்.சீ.குத்தூஸ் கௌரவ அதிதியாகவும், கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்வர் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் மூத்த வீரர்கள் உட்பட விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment