பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களுடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு சகல உதவிகளும் உங்களை வந்து சேரும்: கிழக்கு மாகாண ஆளுநர்

(றியாஸ் ஆதம்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு நிதிசார் வழிகாட்டல்கள், நிருவாகத் தேவைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளும் கிழக்கு மாகாண சபையிலிருந்து உங்களை வந்து சேரும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அழைப்பின் பேரில் நான் இந்த புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் கலந்துகொள்வதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக எனது முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அத்தனை பேருக்கும் ஜனாதிபதியினுடைய ஆசீர்வாதத்தை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கிழக்கு மாகாணத்திலும், அக்கரைப்பற்றிலும் உள்ள உள்ளுராட்சி சபைகள் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு முழு உதவிகளும், ஆதரவும் தன்னிடமிருந்து கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி உறுதியளிக்குமாறு என்னிடம் கூறியுள்ளார்.

எமது நாட்டின் ஜனாதிபதி பாகிஸ்தான் நாட்டினது சுதந்திர தின நிகழ்வில் விசேட விருந்தினராக கலந்துகொண்டார். இது எமது ஜனாதிபதி வெளிநாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளார் என்பதனை வெளிக்காட்டுகிறது. நமது நாட்டு மக்களின் நலவுக்காகவே ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணிவருகிறார்.

நாங்கள் கடந்து வந்த மிக மோசமான கால கட்டத்தில் நான் வெளிநாட்டு அமைச்சராக இந்த நாட்டிலே இருந்த போது இந்த நாட்டிலே இருந்த பயங்கரவாத சூழலில் இலங்கை முஸ்லிம்கள் நாடு ஐக்கியப்படுவதற்கும், தீவிரவாதத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எப்பொழுதும் ஆதரவு வழங்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இந்த நாட்டின் ஒற்றுமை மீது பற்றுறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவது மாத்திரமல்லாது இந்த நாட்டில் எல்லா வகையான தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றுக்கு எதிராகவும், உறுதியாகவும் செயற்படுகின்ற ஒருவராவார். கிழக்கு மாகாண மக்கள் மாத்திரமல்ல இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக உறுதியோடு இருக்கின்ற உங்களுடைய தலைவர் அதாஉல்லாவுக்கு நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

நான் ஜனநாயகத்திலும், மக்கள் ஆட்சியிலும் மிக உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் உங்களுடைய விருப்பத்தையும், தெரிவினையும் முற்படுத்தியிருக்கின்றீர்கள். நான் இன்று முஸ்லிம் உறுப்பினர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்திருக்கின்றேன். அதே போன்று சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண் உறுப்பினரும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராவார். இந்நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் சமூகங்கள் ஒற்றுமையாகவும், நட்புடனும் வாழ்கின்றனர் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

நாங்கள் இந்த செய்தியினை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அத்துடன் நாட்டுக்கு வெளியே முழு உலகிற்கும் கொண்டுசெல்ல வேண்டும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கிழக்கு மாகாணத்தில் மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணை சமூகங்களுக்கிடையில் வேற்றுமையின்றி எல்லோரும் ஒன்றாக ஒரு சமூகமாக ஆளப்பட வேண்டும் என்கின்ற செய்தியை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் அநேகமானவர்கள் இளைஞர்களாகும். இளமையாக இருக்கின்ற போதே அதிகமாக வேலை செய்ய முடியும். அந்த வகையில் உறுப்பினர்கள் அதிகமாக சேவை செய்ய வேண்டும். உங்களிடம் நேர்மையும், சிறந்த பண்பும் இருந்தால் நீண்டகாலம் மக்களுக்கு சேவையாற்ற முடியும். மிக உயர்ந்த தொழில்வான்மையோடும், கௌரவத்தோடும் மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment