தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சின் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (19) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சின் உதவிச் செயலாளர் கே.நிகரில்காந், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.ஏ.வஹாப் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி அமைச்சின் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அக்கரைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட 42பயனாளிகளுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கென 5.8மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கால்நடை வளர்ப்பிற்கு 13பேரும், கைத்தொழில் ஊக்குவிப்பிற்கு 29பேரும் இத்திட்டத்தின் ஊடாக நன்மையடையவுள்ளனர். இவர்களுக்கு கால்நடைகள், தையல் இயந்திரம், மா அரைத்தல் இயந்திரம், மற்றும் தேங்காய் எண்ணெய் உருக்கும் இயந்திரம் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கென 1500மில்லின் ரூபா நிதியினை செலவிடுவதற்கு அமைச்சினால் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் உதவிச் செயலாளர் கே.நிகரில்காந் இதன்போது தெரிவித்தார்.
0 comments:
Post a Comment