பிரதான செய்திகள்

கல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு

கல்முனை பொலிஸ் பிரிவில் நேற்று (06) கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் இன்று (07) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலமையை கண்டித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று (06) ஹர்த்தால், கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து கூடிநின்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களை கலைப்பதற்காக சில இடங்களில் படையினரால் வான் நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதுடன் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது சம்பவ இடங்களில் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மற்றும் படை உயர் அதிகாரிகளுக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (06) இரவு இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த இளைஞர்களை நிபந்தனையுடன் விடுவிப்பதற்கு பொலிஸ் தரப்பு இணக்கம் தெரிவித்ததாக சாய்ந்தமருது ஷூரா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரிவித்தார்.

இதன் பின்னர் இவர்கள் அனைவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எதிர்காலங்களில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையில் செயற்படுவதில்லை என்ற உறுதிமொழியுடன் குறித்த நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்களில் கையொப்பங்கள் பெறப்பட்டு இன்று அதிகாலை இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை சம்பவ இடங்களில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சமரச கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment