வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று மற்றும் நாளைய தினத்தில் வீசும் நிலையுள்ளது.
இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வோர், சுழியோடிகள், கடல்பயணங்களை மேற்கொள்வோர் எவரும் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்தார்.
இலங்கையை சுற்றி வீசும் கடுங்காற்றினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படப் போகும் அசாதாரண நிலைமையை எதிர்கொள்ள அவசரகால அவதான நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (5) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட அந்தமானில் ஏற்பட்டுள்ள குறைந்த வலுவான தாழமுக்கத்தினால் ஏற்பட்ட கடுங்காற்று இன்று காங்கேசன் துறை, திருகோணமலை, பொத்துவில், காலி, அம்பாந்தோட்டை பகுதிகளில் வீசக் கூடும். எனவே அந்த பிரதேசங்களை சேர்ந்த கரையோர வாழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இன்று இலங்கை கடற்பரப்பில் காற்றின் வேகம் 100க்கு 50 வீதம் அதிகமாக இருப்பதோடு, வடகிழக்கில் நாளை இதன் வேகம் இன்னும் அதிகளவாக காணப்படும். இந்த காற்றின் வேகம் எட்டாம் திகதியளவிலேயே குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த காற்றின் வேகம் 70 கிலோ மீற்றருக்கு அதிகமாக இலங்கையை கடந்து செல்லும் இவ்வேளையில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்கரையருகில் உள்ள மீனவர்களை தொழில் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்வதோடு கடலுக்குள் பயணிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment