(சம்சுல் ஹூதா)
பொத்துவில் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதனால் ஐம்பத்தி மூன்று வயதுடைய பாக்கியவத்தையைச் சேர்ந்த எம்.சலீம் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை 37 வயதுடைய பெண் ஒருவரும் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று (5) அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை இருவரைத் தாக்கியதுடன், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யானை பொத்துவில் பாக்கியவத்தைப் பகுதியிலிருந்து நான்காம் வாட் ஊடாக பொத்துவில் ஹிதாயாபுரப் பகுதிக்குள் புகுந்து வீடுகளுக்கும் மதில்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கூடிய பிரதேச மக்கள் யானையை விரட்ட முயற்சித்த போது யானை பொத்துவில் முஹூது மகா விகாரையின் காட்டுப்பகுதிக்குள் புகுந்து கொண்டது.
அவ்விடத்திற்கு விரைந்த லகுகலை வனஜீவராசி அதிகாரிகள், பொத்துவில் பொலீஸார் மற்றும் அறுகம்பை விசேட அதிரடிப்படையினர் யானையை அகற்ற முயற்சித்த போதும் மாலை 6மணி வரை பயனளிக்கவில்லை. பின்னர் வனஜீவராசி அதிகாரிகளினால் யானை வெடில் வீசப்பட்டதன் பிற்பாடே யானை காட்டுப்பகுதியை விட்டு அகன்றதுடன் மீண்டும் வந்த வழியாக ஊருக்குள்ளால் சென்று பொத்துவில் 1ம் கட்டை வனப்பகுதியை அடைந்தது.
மேலும் குறித்த காட்டு யானையை ஊருக்குள் இருந்து அகற்றுவதற்கு உதவிய லகுகலை வனஜீவராசி அதிகாரிகள், பொலீஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஏனையோருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிப்பதுடன் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment