புதிய சிந்தனையுடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமும், தமிழ் மக்களை ஏமாற்றுமாயின் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எமது நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் ஆயுதப்போராட்டங்கள் மீண்டும் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் அரசியலமைப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியலமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் ஒரு தீர்வை அல்லது மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லையென்றால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்கள் முன்னால் நாம் செல்லமுடியும். சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மாற்றம் காணப்படுகிறது.
இன்று வடக்கு, கிழக்கில் பல சிங்களவர்கள் தமிழ் மக்களுடன் அந்நியோன்யமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். மறு பக்கத்தில் எம்மீது மக்கள் வசைபாடுவதுடன், சேறுபூசுகின்றனர். இருந்தபோதும் இனப்பிரச்சினைக்குத் அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெறவேண்டும் என்பதற்காக நாம் அரசாங்கத்துடன் ஒத்துப்போகும் வகையில் செயற்படுகின்றோம்.
இவ்வாறான நிலையில் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment