எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வடக்கு, கிழக்கிற்கு வெறுங்கையுடன் அனுப்பி வடக்கில் சிறியளவில்காணப்படும் இனவாதத்தை பலப்படுத்த வேண்டாமென அமைச்சர் மனோ கணேசன், தென்பகுதி அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் யோசனை என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்களவர்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற சந்தேகம், தமிழ் மக்களிடமும் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அரசியலமைப்பு சபையில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தல் அல்லது அதனை மறுசீரமைத்தல், தேர்தல் முறை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த இடைக்கால அறிக்கையில் யோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமாகும்.
தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்துவார்களா என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியிலும், அரசியல் உரிமைகைளை மதிக்காது தம்மை இரண்டாவது பிரஜைகளாக நடத்துவதற்கு பெரும்பான்மை செயற்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. அதேபோல அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்துமா என்ற பாரியதொரு சந்தேகம் சிங்களவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
எனினும், இலங்கை அரசாங்கத்தின் வியூகத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளது. ஒன்றிணைந்த நாட்டை ஏற்றுக் கொண்டதன் ஊடாக இந்த செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் தென்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.
தனிநாடு என்ற வியூகத்திலிருந்து, அரசாங்கத்தின் வியூகத்துக்கு வந்திருப்பது தெற்கிற்கு சிறந்ததொரு செய்தியாகும். இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை வடக்கு, கிழக்கிற்கு வெறுங்கையுடன் அனுப்பினால் வரலாறு மன்னிக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு இரண்டாக பிளவுபடும், நாட்டை பிளவுபடுத்த ஆயுதம் ஏந்துவோம் என யாராவது கூறினால் அது அரசியலமைப்புக்கு முரணானது. வடக்கிலோ தெற்கிலோ எவரும் ஆயுதம் ஏந்துவதற்கு இடமளிக்க முடியாது. மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி நாட்டில் தீயிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். அரசியலமைப்பு விடயத்தில் பாடசாலை பிள்ளைகள் போல நடந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

0 comments:
Post a Comment