பிரதான செய்திகள்

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களின் முறுகல் நிலைக்கு அரசியல் கட்சிகளே பிரதான காரணம்:

(றஹ்மத்துல்லா) 

இனங்களுக்குள்ளும், இனத்திற்குள்ளும் எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாமல் எல்லா மக்களும் சமமாக, சந்தோசமாக, சகோரத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வுத் திட்டமாகவே முன்னர் இருந்தவாறு கல்முனை மாநகர சபையுடன் மேலும் மூன்று சபைகளை ஏற்படுத்துமாறு கோருகின்றோம் என கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் டாக்கடர் எஸ்.எஸ்.எம். அஸீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று (01) இரவு கல்முனை பள்ளிவாயல் காரியாலத்தில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

1987ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை பட்டின சபை மற்றும் கரவாகு மேற்கு, கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு என 03 கிராம சபைகளாகவே இருந்து வந்துள்ளன. 1987ஆம் கொண்டு வரப்பட்ட பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் இவைகள் இணைக்கப்பட்டன. 2001ஆம் ஆண்டு மாநகர சபையாகவும் மாற்றம் செய்யப்பட்டது.

சாய்ந்தமருக்கான தனியான உள்ளுராட்சி மன்றக்கோரிக்கையானது ஏனைய இனங்களுக்கும், பிரதேசங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு அது அமைய வேண்டும் என்பதற்காகவே 04 ஆக பிரித்து வழங்குமாறு நாம் கோருகின்றோம்.

இது விடயமாக நாங்கள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களிடம் பேச்சுக்களை நடத்திய போது பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கதைத்து இதனை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

யாருடைய அனுமதியுமின்றி இணைக்கப்பட்ட இச்சபைகள் பாரிய பிரதேசங்களையும் சுமார் ஒரு இலட்சம் சனத்தொகையையும் கொண்டமைந்த  மாநகர சபையாக இயங்கி வருகின்றமை அதன் நிருவாகத்திற்கும், வளப்பங்கீடுகளுக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது குப்பைகளைக் கூட முறையாக அகற்றுவதற்கு அதன் நிருவாகத்தினருக்கு முடியாமலுள்ளது.

ஆகவேதான் அதனை முன்னர் இருந்தவாறு பிரிப்பதனால் எந்தவொரு சமூகமும், பிரதேசமும் பாதிப்படையப் போவதில்லை. அவர்களை அவர்களின் அபிலாசைகள், தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் உரவாகியுள்ள முறுகல் நிலைக்கு அரசியல் கட்சிகளே பிரதான காரணமாகவுள்ளது. 

கல்முனை நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். இது ஆங்கிலேயர் காலத்தில் 1897 ஆம் ஆண்டு தோற்றம்  பெற்றுள்ளது. இதனுடைய எல்லைகளாக தாளவெட்டுவான் வீதியிலிருந்து சாய்ந்தமருது கிராமம் வரையில் அமைந்துள்ளது.

1936ஆம் ஆண்டு கிராமிய சபைகள் உருவாக்கப்பட்ட போதும், 1946 ஆம் ஆண்டு பட்டின சபைகள் உருவாக்கப்பட்ட போதிலும்  அதன் எல்லையில் எந்தவித மாற்றமும் இடம்பெறவில்லை. இதன் போது இனவிகிதாசரம் முஸ்லிம்கள் 75 சதவீதமும், தமிழர்கள் 25 சத வீதமுமாக இருந்தனர்.

முஸ்லிம்கள் அறுதிப் பெருமம்பான்மையைக் கொண்டமைந்த கல்முனை பிரதேசத்தில்  அரசியல் ரீதியில் பலமிக்க ஒரு சமூகமாவே நாங்கள் இருந்து வருகின்றோம். சாய்ந்தமருது மட்டும்  பிரிக்கப்படுகின்ற போது எங்கள் அரசியல் சமநிலையில் குழப்பம் ஏற்படுகின்றது. தமிழ், முஸ்லிம் விகிதாசாரம் 60க்கு 40 ஆக மாறிவிடும். எனவே கல்முனை பட்டின சபைக்குரிய பகுதியை விட்டு கொடுக்க மக்கள் ஒரு போதும் தயாரில்லை. இதனை தவறவிடுவோமாயின் கல்முனை என்றும் வேர் அறுக்கப்பட்ட ஓரிடமாக மாரிவிடும். 

எங்களது பிரச்சினைகளை நாங்களாகவே பேசித் தீர்க்க முடியும். இதற்காக சாய்ந்தமருது மக்களை நோக்கி அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம். ஜம்யத்துல் உலமா சபையிடம் அதற்கான மத்தியஸ்தம் வகிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இதற்காக அரசியல் வாதிகளும் ஒரு கொள்கைரீதியான உடன்பாட்டிற்கு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment