மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுவொன்றினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து கவலையடைவதாகவும், அச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
மேற்படி சம்பவத்தில் பொலிசார் தலையிட்டு உடனடியாக சுமூக நிலையை ஏற்படுத்தாவிட்டால் இனவாத சக்திகள் களமிறங்கி ஏனைய பிரதேசங்களுக்கும் இனவாத நடவடிக்கைகளை பரவச்செய்யும் அபாயம் உள்ளதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்
கடந்த சனிக்கிழமை இரவு கிரான் பிரதேசத்திற்குச் சென்று வியாபார ஆயத்தங்களைச் செய்த ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களும், ஞாயிறு காலை அங்கு சென்ற வர்த்தகர்களும் பொலிசார் முன்னிலையில் தகாத வார்த்தைகளினால் வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் அச்சமடைந்த நிலையில் வர்த்தகர்கள் வீடு திரும்பினர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவ்வர்த்தகர்களை வெளியேற்ற வேளையில் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்தமை கவலையான விடயமாகும். குறிப்பாக கிரான் பிரதேச சந்தையில் மிக நீண்டகாலமாக தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்றினைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதே போன்றுதான் ஏறாவூர் பிரதேச சந்தையிலும் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வாழைச்சேனை பஸ் நிலையம் அமைக்கும் விடயத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்ச்சையையடுத்து கிரான் பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்டமை துரதிஷ்டவசமானது. இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டுமொரு இன முரண்பாட்டினை ஏற்படுத்தலாம் என அஞ்சுகின்றேன்.
இவ்வாறான சம்பவங்களின் போது பொலிசார் நீதிமன்றத்தினை நாடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்பதுடன் பொலிசார் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment