ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒலுவில் பிரதேச ஆதரவாலர்கள் பலர் அக்கட்சிகளில் அதிருப்தியுற்று தேசிய காங்கிரஸ் கட்சியில் இன்று (12) இணைந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை அவரது கிழக்கு வாசல் இல்லத்தில் சந்தித்த பின்னர் அவர்கள் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். இதன்போது தேசிய காங்கிரசின் ஒலுவில் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.றியாசும் கலந்துகொண்டார்.
இதன்போது ஒலுவில் பிரதேச இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்...
ஒலுவில் பிரதேசம் அண்மைக்காலமாக கடலினால் காவுகொள்ளப்படுகிறது. மேலும் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் படகுகள் செல்லும் பாதை என்பன மண்ணினால் மூடப்பட்டுள்ளது இதனால் ஒலுவில் பிரதேச மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் ஒலுவில் பிரதேசம் புறக்கனிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கவலையடைகின்றோம்.
ஒலுவில் பிரதேசத்திற்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்ட மு.கா மற்றும் அ.இ.ம.கா கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை இதனால் எமது பிரதேச இளைஞர்களும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தேர்தல் காலம் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் அரசியல் வாதிகள் போலி வாக்குறுதிகளை கூறி வாக்குகளை பெற்றுச்செல்லுகின்றனர். பின்னர் அவர்கள் அந்தப்பக்கம் வருவதே கிடையாது. இதேவேளை ஒலுவில் பிரதேசத்தில் ஏதாவது பிரச்சினைகள் வருகின்ற போது ஒருகட்சியினர் விஜயம் செய்கின்ற போது மறுகனம் மாற்றுக் கட்சியினரும் வருகை தருகின்றனர். இவைகள் அரசியல் நோக்கம் கொண்ட விஜயங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஒலுவில் பிரதேசத்தையும் மக்களையும் அரசியலுக்காகவே பாவிக்கின்றனர். இவ்வாறான சதிகாரர்களின் நோக்கங்களை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் தக்க பாடம் புகட்டவே தேசிய காங்கிரசில் இணைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment