அம்பாரை மாவட்டத்தில் கரும்புச்செய்கை பன்னப்படாத விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போகத்தில் வேளான்மை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அம்பாரை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
அம்பாரை மாவட்டத்திலுள்ள கரும்பு விவசாயிகள் கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை எமது பகுதி அரசியல்வாதிகளிடம் எத்திவைத்த போதும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக எமது சங்கத்தினர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஊடாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவரும், முன்னாள் மேயருமான ஆசாத்சாலியை கொழும்பில் சந்தித்து அம்பாரை மாவட்டத்தில் கரும்புச்செய்கை பன்னப்படாத விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போகத்தில் வேளான்மை செய்வதற்கும், அடுத்த போகத்தில் கரும்பு செய்வதற்கான உடன்படிக்கையினையும் செய்வதற்கும் உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தவிடயமாக கருத்திற்கொண்ட ஆசாத்சாலி சம்மந்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பிரச்சினைகளை எத்திவைத்ததுடன் பிரதமர் அலுவலகத்திற்கும் சென்று மேற்படி பிரச்சினைகள் தொடர்பான கடிதத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். விரைவில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இதன்பிரகாரம் கடந்த 3ஆம் திகதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கச்சேரியில் இதுதொடர்பான கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெரும்போகத்தில் வேளான்மை செய்யுமாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீத்துவைப்பதற்கு பல்வேறு மட்டங்களிலும் உதவி செய்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவரும், முன்னாள் மேயருமான ஆசாத்சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு அம்பாரை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கை உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment