அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படாமல் அநீதி இளைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அடிப்படை உரிமை மீறலின் கீழ், உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எஸ். ஆப்தீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் 585 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளதையடுத்தே, வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வரவு - செலவுத்திட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டமைக்கமைய ஏனைய மாவட்டங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குமாறு கோரி பல ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பிரஸ்தாபித்தும் இதுவரையில் அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment