கடல் மார்க்கமாக ஏற்படும் சகல அச்சுறுத்தல்களிலிருந்து தாய் நாட்டை பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கடற்படைத் தளபதி என்ற வகையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க கடற்படையின் ஊடாக முழுமையானதும் சரியானதுமான தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 22ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நேற்று எளிமையான முறையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது...
66 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் 22ஆவது தளபதியாக கடமைகளை பெறுப்பேற்க கிடைத்தமையை தான் பாக்கியமாக கருதுவதுடன், 35 வருடங்களாக கடற்படையின் ஊடாக தனக்கு கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி இந்த பொறுப்பை சிறப்பான முறையில் நிறைவேற்ற எதிர்பார்க்கின்றேன்.
30 வருட காலமாக எமது தாய் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கடற்படை முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. இதற்காக எமது தொழில்சார் திறமைகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகிய கால கடற்படைத் தளபதியாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவுக்கு நேற்று கடற்படைத் தலைமையகத்தில் மரியாதை அணிவகுப்பும் பிரியாவிடையும் வழங்கப்பட்ட அதேசமயம் புதிய தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கு மரியாதை அணிவகுப்புடன் வரவேற்றும் வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதிகள் சம்பிரதாயமுறையில் பயன்படுத்தும் வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அதன் பின்னர் சர்வமத ஆசிர்வாதத்திற்கு மத்தியில் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க சுபவேளையில் முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கடற்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறவினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments:
Post a Comment