(பிறோஸ்)
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (24) நிதியமைச்சில் அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மேலும் கூறியதாவது,
சவூதி அரேபிய அரசாங்கத்திடம் அனுமதிகோரி அனுப்பப்பட்டிருந்த எனது முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நிதியை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இத்திட்டத்துக்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல விவசாயக் குடும்பங்கள் நன்மையடைவதுடன், வருடத்தில் ஒரு முறை மாத்திரமே (மானவரி) பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம், வருடத்தில் இரண்டு முறைகள் பயிரிடமுடியும். இதன்மூலம் எமது விவசாயத்தில் நாம் தன்னிறைவடைய முடியும்.
இதுதவிர, இன்னும் எமது பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய பண்ணை வளர்ப்பு, புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகாவலி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் நிதியமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment