சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மீதான எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகளை ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவச் சபை நிராகரித்துள்ளது.
ஜி.எம்.சி. (General Medical Council) என்று அழைக்கப்படும் இந்நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஒரு சுயாதீன நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் அங்கீகாரத்தை வேண்டி சர்வதேச அளவில் பல மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில், பதினொரு மருத்துவக் கல்லூரிகளை தகுதியற்றவையாகக் கருதி மேற்படி நிறுவனம் நிராகரித்துள்ளது. அந்தப் பதினொரு கல்லூரிகளுள் சைட்டம் கல்லூரியும் ஒன்றாகும்.
மக்களின் பாதுகாப்பையும், நன்மையையும் உறுதிப்படுத்தும் விதமாகவே மேற்படி பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும், நிராகரிக்கப்பட்டுள்ள இந்தப் பதினொரு கல்லூரிகளிலும் கல்வி கற்கும் மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படும் மருத்துவப் பரீட்சைகளுக்குத் தோற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஐக்கிய இராச்சியத்தின் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜி.எம்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்லூரியினதும் செயற்பாடுகளையும் ஏனைய தகவல்களையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே இந்தப் பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment