பிரதான செய்திகள்

மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலைகளை கண்டித்து: கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இவ் இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், பர்மா அரசாங்கத்தினையும்  இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம்

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களை மனித உரிமைகளை மீறி அரச படைகளும், கடும் போக்குவாத அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகளில் இது வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக தப்பிச்சென்றுள்ளனர். உலகில் சமாதானத்தை உருவாக்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளாமல் மௌனமாக செயற்படுவது குறித்து இலங்கை முஸ்லிம் மக்கள் கவலையடைகின்றனர்.

கிழக்கு மாகாண சபையின் 83வது அமர்வு இன்று (07) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான இணப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இப்படுகொலைகளை நிறுத்துவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், பர்மா அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விட வேண்டும் என்ற அவசர பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்....

ரோஹிங்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளினால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்ட அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வியாபார நிலையங்களில் இராணுவத்தினால் திட்டமிடப்பட்டு கிராமம் கிராமமாகச் சென்று கொள்ளைகளில் ஈடுவடுவதுடன், முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2016ம் ஆண்டு ஆட்சியிக்கு வந்த 'ஆன் சாங் சூச்சி' தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது நிலமைகளில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கைகயில் ரோஹிங்ய மக்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் புதிய அரசாங்கம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்து வருகின்றன. ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படு கொலைகளில் சிறுவர்கள், குழந்தைகள் கூட மிருகத்தனமாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வுகளுக்கு எதிராக துருக்கி நாட்டின் தலைவர் மாத்திரம் குரல் கொடுத்துள்ளார். ஏனைய நாடுகள் மௌனம் காத்து வருகின்றன. பெரும்பான்மையான பௌத்தர்கள் வாழும் மியன்மார் நாட்டில் 50 மில்லியன் சனத் தொகையில் 1.1 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலேயே மிக மோசமான அடக்கு முறைக்கு உள்ளாகும் சிறுபான்மை இனமாக ரோஹிங்ய முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மியன்மார் நாட்டில் 135 உத்தியோகபூர்வ இனக்குழுக்கள் வாழ்கின்றனர். இந்த இனக்குழுக்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படவில்லை. 1982ம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட மியன்மார் பிரஜா உரிமை சட்டத்தின் பிரகாரம் ரோஹிங்யா முஸ்லிம்களை நாடற்றவர்களாக அரசு பிரகடனம் செய்தது. 

முஸ்லிம் பிரஜா உரிமை பெற வேண்டுமாயின் 60 வருடங்களுக்கு மேலாக மியன்மார் நாட்டில் வாழ்ந்து வருவதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என அரசாங்கம் ரோஹிங்ய முஸ்லிம்களிடம் கோரியது. ரோஹிங்ய முஸ்லிம்கள் சார்பில் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் தாங்கள் சுதேசிகள் என நிருவப்பட்டும் அரசு அவைகளை ஏற்க மறுத்தது. ரோஹிங்ய முஸ்லிம் மக்கள் பிரஜா உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக ரோஹிங்ய மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. நில உரிமை, கல்வி, போக்குவரத்து உட்பட பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் ஒரு இலட்சத்திற்கு அதிகமான ரோஹிங்கய முஸ்லிம்கள் அயல் நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடல் மார்க்கமாக ஆபத்தான சிறுபடகுகளில் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான மனித உரிமைகளை மீறி அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலைகளை இலங்கை அரசாங்கம் கண்டிப்பதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இவ் இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், பர்மா அரசினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment