யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது.
இது தொடர்பில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன சபையில் அறிவித்தார்.
யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக பொதுவான நாளொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது தனிநபர் பிரேரணையில் கோரியிருந்தார்.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் அரசாங்கம் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பதிலளித்தார். இந்தப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவுகூருவது மிகவும் முக்கியமானது என்றார்.
குறிப்பிட்டதொரு இனம் சார்ந்ததாக இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்த சகலரும் நினைவுகூரப்பட வேண்டும். இந்தப் பிரேரணையை பாதுகாப்பு அமைச்சு முழு மனதுடன் ஆதரிக்கிறது.
"இருந்தபோதும் சில அவதானிப்புக்களை முன்வைக்க விரும்புகின்றோம். நினைவுத் தூபியானது பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அதாவது பொது மக்கள் செல்லக் கூடியதாகவும், பாதுகாப்பான இடமாகவும் இது இருக்க வேண்டும்.
மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்திருப்பதால் சகலருக்கும் பொதுவான இடமாக அநுராதபுரம் அமையும். இது பற்றி கலந்துரையாடி எதிர்காலத்தில் முடிவொன்றுக்கு வர முடியும் என்றார்.

0 comments:
Post a Comment