(பழுலுல்லாஹ் பர்ஹான்)
'டெங்கை ஒழிப்போம் உயிர்காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (15) வெள்ளிக்கிழமை மட்டு - கல்லடி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக இடம்பெற்றது.
கல்லடி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் ஈ.தியாகலிங்கம் மற்றும் வித்தியாலய ஆசிரிய, ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு கல்லடி விநாயகர் வித்தியாலய சுகாதாரக்கழகம் அனுசரனை வழங்கியிருந்தது.
இவ் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்ட சிறு வயதைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகள் சூழலை சுத்தமாக பேணுவோம், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்போம், வீதியில் குப்பைகளை போடாதீர்கள், தண்ணீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பாவிப்பதை தவிர்ப்போம், சுத்தமான சூழலை உருவாக்குவோம், குப்பைகளை எரிக்காதீர், பெற்றோர்களே டெங்கிலிருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள், டெங்கை ஒழித்து அரசின் பாரிய மருத்துவ செலவைக் குறைப்போம், எமது சூழலை பாதுகாப்பது எமது கடமை, போனால் வராது உயிர் அதை டெங்கில் இருந்து பாதுகாப்போம், டெங்கு நோயை ஒழிப்போம், கிணற்றிற்கு மூடி இட்டு டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடை செய்வோம், டெங்கை ஒழிப்போம் போன்ற பல்வேறு தமிழ் வாசகங்கள் எழுதப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன் போது சூழல் காத்து டெங்கு நோயற்ற சமூகத்தை நாம் படைப்போம் எனும் துண்டுப் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது. மட்டு- கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கல்முனை வீதி ஊடாக வக்கர் மாவடி வீதியினூடாக புதிய கல்முனை வீதிக்கு சென்று கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்து அங்கிருந்து கல்லடி மாரியம்மன் கோயில் வீதியினூடாக மீண்டும் பாடசாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment