பிரதான செய்திகள்

சாட்சியமளிக்க அலோஷியஸ் விரும்பவில்லை

பேர்ப்பர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பயனீட்டு உரிமையாளரான அர்ஜுன அலோஷியசை, விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு திறைசேரி முறிவிநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பணித்துள்ளது. 

இதேவேளை, அலோஷியஸ் சாட்சியம் அளிக்க விரும்பாவிட்டால் அல்லது மறுத்தால், சட்டத்துக்கு அமைவாக அவரை சாட்சியமளிக்குமாறு பலவந்தப்படுத்த முடியாதென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இன்று (14) நடைபெறும் விசாரணைகளில் சாட்சியமளிக்க அலோஷியஸ் விரும்பவில்லையென அவருடைய சட்டத்தரணி காமினி மாரப்பன ஆணைக்குழுவுக்கு அறிவித்தார். 

இது தொடர்பில் சட்டமா அதிபர், சட்டத்தரணியின் கருத்தையும் பெற்றுக் கொள்வதாக பதில் சொலிசிட்டர் ஜெனரல் டபுள்யூ.டி.லிவேரா குறிப்பிட்டார்.

கடந்த (11) வழங்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று அர்ஜுனா அலோஷியஸ் நேற்றைய தினம் திறைசேரி முறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மார்ப்பனவுடன் அவர் ஆஜராகியிருந்தார். 

தனக்காக, தானே சாட்சியமளிக்காமல் இருப்பதற்கு உரிமை இருப்பதாகவும், அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அலோஷியசின் சட்டத்தரணி வாதிட்டார்.

அலோஷியசை விசாரணைக்கு வருமாறு நேற்றைய தினம் ஆணைக்குழு அழைப்புவிடுத்திருந்தது. திறைசேரி முறி விநியோக மோசடி தொடர்பில் அர்ஜூனா அலோஷியஸ் சாட்சியமளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஆணைக்குழு அவருக்கு அழைப்பை விடுத்திருந்தது. 

அவருடைய சாட்சியம் விசாரணையுடன் தொடர்புபட்டது என்பதுடன் முக்கியமானது. அது மாத்திரமன்றி அலோஷியஸ் தானும் விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.

அலோஷியஸ் சாட்சியமளிக்க விரும்பாவிட்டால் அல்லது மறுத்தால் சட்டத்துக்கு அமைய அதற்கு மதிப்பளிப்பது கடமையாகும் என்பதுடன், அலோஷியசை சாட்சியமளிக்குமாறு பலவந்தப்படுத்த முடியாதென ஆணைக்குழு தெரிவித்தது.

பேர்ப்பர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் திறைசேரி முறிகளுக்காக விண்ணப்பித்த கேள்விப்பத்திரங்களின் எண்ணிக்கை, இது தொடர்பில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள், குறித்த நிறுவனத்துக்கும் மத்திய வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், பான் ஏசியா வங்கி மற்றும் முதன்மை விநியோகஸ்தர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து அலோஷியசை சாட்சியமளிக்குமாறும் ஆணைக்குழு கோரியிருந்தது.

இது மாத்திரமன்றி அவருடைய தனிப்பட்ட தொடர்புகள் குறிப்பாக, நிறுவனத்தின் உரிமை, கட்டுப்பாடு, கட்டமைப்பு உள்ளிட்ட 15 முக்கிய விடயங்கள் பற்றியும் அவரிடம் ஆணைக்குழு கோரியிருந்தது. 

குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள், அர்ஜூனா மகேந்திரனுடன் காணப்படும் உறவு, ஊழியர் சேமலாப நிதியத்தின் அதிகாரி இந்திக்க சமன்குமார, தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரி நவீன் அநுராத, பான் ஏசியா வங்கியின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா ஆகியோருடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியும் அலோஷியசிடம் ஆணைக்குழு விசாரணை நடத்த எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment