(ஆதம்)
வடக்கு, கிழக்கு இணைப்புக்காகவும், சமஷ்டி ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதற்காவுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 20வது திருத்தத்தை ஆதரித்தனர் எனவும் இவ்வாறான விடயங்களிலும் முஸ்லிம் சமூகம் தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரசிக்கு அக்கரையில்லை எனவும் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரசிஸ் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (13) புதன்கிழமை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்கொண்டு வருகிறன்றர்.
20வது திருத்தத்தின் ஊடாக கிழக்கின் ஆட்சியினை நீடித்து, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க முஸ்தீபுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு வட மாகாண சபையில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையிலும் தமிழ் தேசியக் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து, வடக்கு, கிழக்கை இணைக்கும் தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத்தான் 20வது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
20வது சட்டமூலத்தை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பல நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாக பத்திரிகை ஊடாக அறியக் கிடைத்துள்ளது. அந்த நிபந்தனைகளில் புதிய அரசியலமைப்பில் இலங்கையின் ஆட்சி முறைமையை சமஷ்டி ஆட்சி என திருத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தல். இதுபோன்று இனங்கள் தொடர்பாக புதிய அரசியலமைப்பில் மாற்றமொன்றை செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காலகட்டத்தில் இந்த நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் அனைவரும் இணைந்து, வடக்கு, கிழக்கு இணைப்புக்கான இந்த முஸ்தீபினை தடுப்பதற்குத் முன்வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, ஜனாதிபதியவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குமாறு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன். மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷ சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைத்துத் தரப்பினரிடமும், 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என இந்த ஊடகவியலாளர் மாநாட்டினூடாக கேட்டுக் கொள்கிறேன்.
பணம் மற்றும் பதவிகளுக்கு சோரம் போகக் கூடிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும், மு.காங்கிரஸ் உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையில் இருக்கத்தக்கதாக, இந்த மாகாண சபையின் ஆட்சியை நீடிப்பது கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு முரணானது என்பதை இந்த நாட்டிலுள்ள நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவரும் உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment