-அமைச்சர் தலதா அத்துகொறல்ல பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கடல் கடந்த நாடுகளில் தொழில் புரிவோர் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், இலங்கை வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு நாடு முழுவதிலும் நடாத்தி வரும் நடமாடும் சேவை நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரும், நீதி அமைச்சருமான தலதா அத்துக் கொறல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.காங்கிகரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைசால் காசீம், சம்மாந்துறைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு தொழில் புரியும் போது பாதிக்கப்பட்டோர், வெளிநாட்டவர்களால் பாதிப்புக்குள்ளான இலங்கையர் பிரச்சினை, வெளிநாடுகளுக்குச் சென்று இதுவரை காணாமல் போனோர் பற்றிய தகவல்கள், வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய புலமைப்பரிசில்கள் கிடைக்காமை போன்ற 04 வகையான பிரச்சினைகள் இந்நடமாடும் சேவை மூலம் விசாரித்து, தீர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் தலதா அத்துகொறல்ல பாதிப்புக்குள்ளானோரிடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டு, பதிவுகளையும் செய்ததோடு, உரிய அதிகாரிகளுக்கும் அதனைத் தீர்த்துவைக்க உத்தரவிட்டதையும் காண முடிந்தது என்றும், இன்றைய தினத்தில் சுமார் 82 முறைப்பாட்டாளர்களது பிரச்சினைகள் நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டது என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.













0 comments:
Post a Comment