(றியாஸ் ஆதம்)
சமூக உள நலத்தை மேம்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் உளநல பணியகம் சமூக சுகாதார மையங்களை நிறுவி வருகின்றது. அவை சமூகம், குடும்பம் மற்றும் பயனாளிகளின் பங்கேற்புடன் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நிறுவப்பட்டு வருகின்றன. இச்செயற்பாடானது அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இம்மையங்கள் சமூகத்தில் உள்ள மக்கள் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் சமூக, கலாச்சார ரீதியாக பயனாளிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளை ஒருங்கிணைக்கின்றன. மேலும், இம்மையங்களானது உளநலச் சேவைகள் ஏனைய சுகாதாரச் சேவைகளுடனும் (தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதாரச் சேவைகள்) சமுதாயமட்ட புனர்வாழ்வு சேவைகளுடனும் பிற சமூக சேவைத் துறைகளுடனும் இணைக்கப்படுவதை உறுதி செய்கின்றன.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் ஒரு சமூக சுகாதார மையம் நிறுவப்பட்டு அங்கு உளநல மேம்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. சமூக சுகாதார மையங்கள் தேவைக்கேற்ப பிரதேச செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து சேவைகளை ஒருங்கிணைக்கும்.
சுகாதார வைத்திய அதிகாரி சமூக சுகாதார மையத்திற்கு பொறுப்பாக ஒரு நபரை நியமிப்பார். அனைத்து ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் திறமை மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் சமூக சுகாதார மையங்களுடன் சேர்ந்து சேவைகளை வழங்குவதில் ஈடுபடுவர். அவர்கள் சுகாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு உளநலத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவர், இதன் மூலம் சமூகத்தில் உள்ள மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவார்கள்.
உளநல சேவையினை மேம்படுத்தி ஆரோக்கியமிக்க சமூகம் ஒன்றினை கட்டியெழுப்பும் குறித்த திட்டத்தின் ஊடாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலும் சமூக சுகாதார மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் முதலாவது சமூக சுகாதார மையம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த சுகாதார மையத்தினை திறந்து வைத்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.ஏ.கபூர், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாட், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஜீவா, பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபலின் ஒருங்கிணைப்பில் மேலும் மூன்று சமூக சுகாதார மையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அதற்கான பணிகளை டொக்டர் நௌபல் மேற்கொண்டு வருகின்றார்.
எதிர்காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இச்சமூக சுகாதார மையத்தினை திறப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உளநல சேவையினை மேம்படுத்தி அதனூடாக பொதுமக்களுக்கு சிறந்த பணிகளை முன்னெடுத்து ஆரோக்கியமிக்க சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதே இதன் பிரதான நோக்கமாகும்.

0 comments:
Post a Comment