(மஹாகவி ஜலால்டீன்)
தமிழ் கவிதைப் பாரம்பரியத்திற்கென்று ஒரு நீண்ட வரலாறும் அதற்கென்று பல வரையறைகளும் அவ்வக் காலப்பகுதிக்கென்ற போக்கும் (Trend) உள்ளன. 19ம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் அமைப்பிலேயே இருந்து வந்துள்ளது. 1855ல் அமெரிக்கக் கவிஞரான Waltwhitman மரபிலிருந்து வெளியேறி Free Verse வடிவிலான கவிதைகளை எழுதத் தொடங்கினார். இதன் பின்னர் இத்தாலி, ஸ்பனிஸ், ஜேர்மன், ருஷ்ய மொழிகளின் மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
பிரான்ஸ் நாட்டின் 'சரியலிஷம்', இத்தாலியக் கவிஞர்களின் 'பியூச்சரிஷம்', ஜேர்மனியின் 'எகஸ்பிரஸனிஷம்' என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின. Waltwhitman இன் வசன கவிதைகளைத் தொடர்ந்து மரபுக்கவிதையில் நாட்டம் கொண்டிருந்த பாரதியார் வசன கவிதையில் விருப்புற்று அக்கவிதைகளை தமிழில் படைத்துள்ளார். பாரதியைத் தொடர்ந்து பலர் மரபு, புதிது அல்லது நவீனம், பின்னவீனம் என்று பலவகையான வடிவங்களில் கவிதைகளைப் படைத்து வந்துள்ளனர்.
மரபுக்கவிதை என்பது யாப்பிலக்கணங்களைப் பின்பற்றி எழுதப்படுகின்ற அதே நேரம் புதுக்கவிதைக்கு இலக்கணங்கள் இல்லை என்றில்லை. இதனால்தான் மாபெருங் கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான் "புதுக்கவிதைக்கு இலக்கணமோ வடிவமோ இல்லை என்று சொல்வது தவறு என்றும் அவ்வாறு வசனத்தில் எழுதப்படுவது புதுகவிதை என்ற கருத்தும் தவறானது என்றும் இதை விளக்குவதற்கு வசனம், கவிதை என்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று அறிவது அவசியமாகும்" என்றும் கூறியுள்ளார். இங்கு புதுகவிதையில் படிமம், குறியீடு, உணர்ச்சி, ஒத்திசைப்பு போன்றவை பேணப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர தமிழ் இலக்கியத்துள் பாய்ச்சலாகி வந்த லிமரிக்(அயர்லாந்து), கஸல்(அரபிக்), ஹைக்கு(ஜப்பான்), வடிவங்களும் தமிழில் பாரிய கவிதைப் பாரம்பரியம் கொண்டவை மட்டுமல்லாமல் அவையும் யாப்பு இலக்கண விதி முறைகளைக் கொண்டவை. இக்கவிதைகளையும் தமிழில் எழுதுகின்ற குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களும் உள்ளனர்.
தமிழ் கவிதைப் பரப்பு இவ்வாறான ஒரு கவிதைப் பாரம்பரியத்தினைக் கொண்டிருக்கின்ற வேளை முகநூலின் வருகை இதன் தளத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் நோக்கும் போது முகநூல் பல நல்ல கவிஞர்களை உருவாக்கி தமிழ் கவிதைப் பாரம்பரியத்தை நாற்காலி போட்டு உட்கார வைத்து உபசரித்து ஆரோக்கியமான கவிதைச் சூழலை ஏற்படுத்தியிருக்கின்ற அதேவேளை சிலர் அப்பாரம்பரியத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தட்டுத்தடுமாற வைப்பதற்கான தளத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதற்கு நாம் முகநூல் இணையத்தினை குறை கூற முடியாது. இதனைப் பயன்படுத்தி மகத்துவம் மிக்க இக்கவிதைப் பாரம்பரியத்தையும் அதன் வரலாற்றையும் சீரழிக்கும் வகையில் அதன் பக்கங்களில் கவிதைச் சூழலின் பிற்போக்குத் தன்மையை பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளதை அவதானிக்கும் போது இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை என்றே கூற வேண்டியுள்ளது.
கவிதை வரலாற்றின் மைற்கற்களாக இருந்துள்ள நல்ல கவிஞர்களின் கவிதைகளைத் தேடிப்படியாமல், கடந்த கால, தற்கால கவிதைப் போக்கினை விளங்கிக் கொள்ளாமல் பலரும் கவிதை என்ற பெயரில் கண்ட நின்றதையெல்லாம் எழுதுகின்ற ஒரு கசப்பான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதே நேரம் தமிழ்க் கவிதைப் பரப்பில் பெறுமதி மிக்க நல்ல கவிதைகளைப் படைத்து நேர்த்தியாய்ப் பெயர் எடுத்துக்கொண்டவர்கள் கூட தமிழுக்கு வருகை தந்த கவிதைகளான லிமரிக், கஸல், ஹைக்கூ போன்றவற்றின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாமல் அவற்றை எழுதி தங்களின் நல்ல பெயர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை முகநூல் இலக்கிய குழுமங்கள் சிலவற்றின் செயற்பாடுகள் மிகவும் கேலிக்கூத்தாகவே உள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீசைக்கு ஆயத்தம் செய்கின்ற சில வாக்கியங்களுக்கும் கவிதை என்ற மகுடம் சூட்டி அதற்கு வெற்றிச் சான்றிதழும் வழங்கி வைக்கின்ற ஒரு கலாச்சாரம் தமிழ்க் கவிதை ப் பரப்பில் பாரிய பீடினையாகவுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் மருத்துவக் குறிப்புகள், இராசிபலன்கள், நாள்நட்சத்திரங்கள் போன்றவற்றையும் வாக்கியங்களாக எழுதி அல்லது ஒரு வாக்கியத்தை மூன்றாக உடைத்துப் போட்டு அல்லது அதை துண்டு துண்டாக உடைத்து ( / ) குறியினையிட்டு கவிதை என்று எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலைமை தமிழ் கவிதைப் பரப்பில் பாரிய வீழ்ச்சியை உருவாக்கி பாடசாலை, பல்கலைக்கழகங்களில் தமிழை ஒரு பாடநெறியாகக் கற்கின்ற மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் கவிதை பற்றிய ஒரு தவறான வெட்டுமுகத்தினைக் காட்டுகின்ற ஒரு நிலைமையினை உருவாக்கும். மேலும் இந்நிர்க்கதியான சூழல் எதிர்கால சந்ததியினருக்கு கவிதை என்றால் வாக்கியமா? பந்தியா? சொற்றொடரா? என்ற குழப்ப நிலையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அழகியலும் உணர்ச்சியும் கலந்து ஆன்மாவை வருடிச் செல்லுகின்ற இலக்கிய வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய மான நிலையினைக் கண்டு நல்ல கவிஞர்களும் கவிதை பற்றிய ஆய்வாளர்களும் முகம் சுழித்துக் கொள்ளுகின்ற இந்நிலைமை துரதிர்ஷ்டவசமானதாகும். தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற இந்நிர்கதியான நிலையினை மாற்றி, இலக்கியத் தளத்தில் ஒரு மறுமலர்ச்சியான கவிதைச் சூழலை உருவாக்க கவிதை எழுதும் நாட்டம் கொண்டவர்கள் முன்வர வேண்டும். இதற்கு தீவிரமான வாசிப்பும் கவிதை பற்றிய தேடலும் ஆய்வும் இன்றியமையாததாகவுள்ளன.


0 comments:
Post a Comment