ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நடமாடுகின்ற கட்டாக்காலி கால்நடைகளை பிரதேச சபையினால் அதிரடியாக கைப்பற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் இன்று (29) தெரிவித்தார்.
இதுதொடர்பில் தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்,
ஏறாவூர் பற்று பிரதேசத்தின் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும் வர்த்தகர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த 18மாதங்களில் ஏறாவூர் பற்று பிரதேசத்தின் செங்கலடி - பதுளை வீதியில் அதிகமான விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதில் 2பேர் மரணமடைந்துள்ளதுடன், 79பேர் காயமடைந்தும் உள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி ஆடு, மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இது விடயத்தில் எவ்வித நெகிழ்வுப்போக்கும் காட்டப்படாது என்பதுடன் கைப்பற்றப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அதன் பின்னரே விடுவிக்கப்படும் எனவும் தவிசாளர் குறிப்பிட்டார்.
பொது இடங்களில் கால்நடைகளின் நடமாட்டமானது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இதனை அவற்றின் உரிமையாளர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் பிரதேச சபையின் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment