பிரதான செய்திகள்

கல்முனையில் மாட்டிறைச்சி விலை நூறு ரூபாவினால் குறைப்பு; முதல்வர் றக்கீப் அதிரடி நடவடிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாட்டிறைச்சியின் விலையை நூறு ரூபாவினால் குறைக்க கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் இப்பகுதிகளில் 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியின் விலை 900 ரூபாவாகவும் முள் சேர்த்த இறைச்சியின் விலை 800 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மாட்டு இறைச்சி வியாபாரிகளை சந்தித்து கல்முனை மாநகர முதல்வர் றக்கீப் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்களது இணக்கத்துடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையில் மாட்டிறைச்சி விலை நூறு ரூபா குறைத்து விற்கப்படுகின்ற நிலையில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்வது எந்த வகையிலும் நியாயமில்லை என மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் எடுத்துரைத்த மாநகர முதல்வர், பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து பிரதேசங்களிலும் இறைச்சி ஒரே நிர்ணய விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதன்போது மாட்டிறைச்சி வியாபாரிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கும் செலவீனங்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுவதாக முதல்வரினால் உறுதியளிக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது விலங்கறுமனைக்கு செலுத்தப்படுகின்ற கட்டணங்களை குறைப்பதற்கு அதன் உரிமையாளரிடம் பேசி, அதே இடத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது. 

மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ரி.சர்வானந்தன், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிசார், ஏ.ஜீ.நஸ்றீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment