பிரதான செய்திகள்

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்: அமைப்பாளர் ரகுபதி உறுதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களில் சிலர் தமிழினத்தை காட்டி கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளமை கவலை தருகின்றது என்று இக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர் கே. ரகுபதி தெரிவித்தார்.

இவருடைய ஆலையடிவேம்பு இல்லத்தில் ஊடகவியலாளர்களை திங்கட்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. தவிசாளர் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார். இந்நிலையில் குறுக்கு வழியில் தவிசாளர் பதவியை அடைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான த. கிரோஜதரன், சி. அருள்ராஜா ஆகிய இருவரும் பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் மூலமாக ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசத்தின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, தனித்துவம் ஆகியவற்றுக்கு பேராபத்து நேர்கின்ற வாய்ப்பு கண் முன் தென்படுகின்றது. இந்நிலையில் இவர்களின் சுய இலாப காட்டி கொடுப்பு அரசியல் குறித்து சுதந்திர கட்சி தலைமைக்கு நான் முறைப்பாடு செய்துள்ளேன்.

அரசாங்கம் மூலமான வரம், வரப்பிரசாதம் ஆகியவற்றை எமது மக்களுக்கு பெற்று கொடுப்பதற்காகவே நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டோம். எனவே மக்களால் எமக்கு வழங்கப்பட்ட ஆணை துஷ்பிரயோகம் செய்யப்படுவதையோ, தாரை வார்த்து கொடுக்கப்படுவதையோ நாம் நிச்சயமாக அனுமதிக்க முடியாது.

நான் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் எதிர் கட்சி தலைவராக பதவி வகித்த காலத்தில் இனத்தை காட்டி கொடுக்கின்ற எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டு இருக்கவில்லை என்பதை எனது நெஞ்சை நிமிர்த்தி கூறுகின்றேன். இதை எனது மக்களும் மிக நன்றாகவே அறிவார்கள்.

மேற்சொன்ன இருவரும் தவிர்ந்த மிக பொருத்தமான ஒருவரே தவிசாளராக தெரிவு செய்யப்படுவார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் எனது மக்களுக்கு பொறுப்புணர்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றேன்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment