பிரதான செய்திகள்

மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துவார் அல் ஹுசைன்

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்  தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் புதிய மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும்   இலங்கை தொடர்பான  உபகுழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு  உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும்  பாதிக்கப்பட்ட  மக்கள் பக்கமே நிற்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும்  எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது  இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இலங்கையானது  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர்  2017 ஆம் ஆண்டு  நீடிக்கப்பட்ட   இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற  விடயத்தை  செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நிற்போம் என்று செய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ள நிலையில் அவர் இலங்கை குறித்து  நடைபெறும் இரண்டு விவாதங்களிலும் கடும்  அழுத்தங்களை பிரயோகிப்பார் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை  இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14  உபக்குழுக்கூட்டங்கள்  ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன.  இந்த கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றிவருகின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment