பிரதான செய்திகள்

அம்பாரை சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடாத்தி நாட்டு மக்கள் மத்தியில் உண்மை நிலையினைக் கொண்டு வரவேண்டும்: தே.கா தலைவர் அதாஉல்லா

முஸ்லிம் மக்களின் மீது சிங்கள மக்களை ஆத்திரம் கொள்ள வைப்பதன் மூலம் இனக் கலவரங்களை உருவாக்குகின்ற சதித்திட்டத்தின் தொடராகவே அம்பாரையில் இரவு நடாத்தப்பட்ட அராஜகங்களும் அமைந்திருக்கின்றன. மீண்டும் முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் கிள்ளுக் கீரைகளாக்கப் பட்டிருக்கின்றன.

இந்நிகழ்வானது, நீண்டகாலமாகத் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட சதியின் பின்னணியிலேயே நடைபெற்றிருக்கின்றது. முஸ்லிம்களின் கடைகளில் உணவு உண்பதை நிறுத்துமாறும், அவர்களின் கடைகளில் உள்ளாடைகள் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறும் பகிரங்கமான மேடைகளிலே முஸ்லிம் விரோத சக்திகளினால் பேசப்பட்டு வந்திருக்கின்றது.

உணவிலும், உள்ளாடைகளிலும் கருத்தடை தொடர்பான மருந்துகள் பாவிக்கப்பட்டு வருவதாகவும் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வந்திருப்பதனை நாம் அறிவோம். இக்கட்டுக்கதைகளை உண்மைப்படுத்தி மேலும் சிங்கள மக்களை முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொள்ள வைக்கும் சதியின் அங்கமாகவே அரசியல் பின்னணிகளோடுதான் அம்பாரையில் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைக்காரர்கள் இதில் திட்டமிட்டு இறங்கியிருப்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகமதிகம் வாக்களித்த நமது ஜனாதிபதி அவர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்து பக்கசார்பற்ற விசாரணை செய்வதற்குப் பணிக்க வேண்டும்.

மேலும், இவர்களால் கூறப்பட்ட உணவில் அவ்வாறான மாத்திரைகள் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதுவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்படியான மாத்திரைகள் இந்நாட்டில் இருக்கின்றதா? என்ற விடயமும் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும். அப்பாவி சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் கூட்டி விடப்பட்டு குளிர்காய நினைக்கின்ற அரசியல் கலாச்சாரத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் உள்பூசல்களை மறைப்பதற்கும் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பதனையும் மக்கள் அறியாமல் இல்லை. இச்செயற்பாடுகளின் உண்மைத் தன்மைகளை கண்டுபிடித்து வெளியில் கொண்டுவருவதன் மூலம் நாட்டு மக்களிடம் இருக்கின்ற சந்தேகங்கள் கழையப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களை தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல.;எம். அதாஉல்லா அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.

மேலும் வழமையான நிலைமைக்கு அம்பாரையைக் கொண்டு வருவதற்கும், சொத்து இழப்பீடுகள் மீள் கட்டமைக்கப்படுவதற்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நாட்டின் பிரஜைகள் என்கின்ற அடிப்படையில் இத்தீய சதிகாரர்களின் வலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் சிங்கள, முஸ்லிம் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

ஊடகப் பிரிவு
தேசிய காங்கிரஸ்

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment