காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (4) வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது முகலாய வாரிசு அரசியல் என, பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இதை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தரம்பூரில் இதுகுறித்த அவர் பேசியதாவது:
‘‘குஜராத் முதல்வராக பதவி வகித்தபோதும், பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் நிலையிலும் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏராளமான ஊழல்கள் நடந்தன.
முகலாய மன்னர் ஜஹாங்கிருக்கு பிறகு ஷாஜகான் பதவியேற்றதை போன்றது என, காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி அக்கட்சியினர் பெருமையுடன் கூறுகின்றனர்.
ஷாஜகானுக்கு பிறகு ஒளரங்கசீப் ஆட்சி பொறுப்பை ஏற்றார். ஒரு குடும்ப ஆட்சியை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா? ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஒளரங்கசீப் ஆட்சி வேண்டாம். 125 கோடி மக்கள் விரும்பும் ஆட்சியே நடைபெற வேண்டும்’’ என பிரதமர் மோடி பேசினார்.

0 comments:
Post a Comment