(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகரப் பகுதியில் நடமாடிய 14 கட்டாக்காலி மாடுகள்
இன்று (10) கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படவிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
"கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.
அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து, அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம் தண்டப் பணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை மிகவும் தீவிரமாக தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் மாடுகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்படும்” என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment