பிரதான செய்திகள்

அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுவோரே சாய்ந்தமருதின் வரலாற்றுத் துரோகிகள்: மறுமலர்ச்சி மன்றம் தெரிவிப்பு

சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படாத நிலையில் இடம்பெறும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்குவார்களோ, அவர்கள்தான் இப்பிரதேசத்தின் வரலாற்றுத் துரோகிகளாவார்கள் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் தெரிவித்தார்.

பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய "சாய்ந்தமருது  உள்ளூராட்சி சபை; யார் துரோகிகள்?" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (18) இரவு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு  மண்டபத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் டொக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்றது. இதில் கருத்துரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் மேலும் தெரிவிக்கையில்;

"எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நூற்றாண்டு காலமாக இருந்து வந்த உள்ளூராட்சி மன்றம் 1987ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபையுடன் இணைக்கப்பட்ட காலம் தொட்டு அந்த உள்ளூராட்சி மன்றம் மீண்டும் உருவாக்கித்தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தபோதிலும் 2006ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் இக்கோரிக்கையை மக்கள்மயப்படுத்தி, எழுச்சிக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்ததன் பிரதிபலனாக அரசியல் தலைமைகள் இக்கோரிக்கையுடன் உடன்பட்டு, வாக்குறுதிகளையும் வழங்க முன்வந்தார்கள்.

2010ஆம் ஆண்டு இதே மண்டபத்தில் வைத்து ஓர் அமைச்சர் முன்னிலையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றப் பிரகடனத்தை மேற்கொண்டோம். அந்நிகழ்வுதான் ஓர் அரசியல் தலைமை எமது கோரிக்கையை முதன்முறையாக பகிரங்கமாக ஏற்று அங்கீகரித்து, வாக்குறுதி வழங்கிய சந்தர்ப்பமாக அமைந்திருந்ததை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

அதுபோன்று பிற்பட்ட காலங்களில் பலரும் இக்கோரிக்கையை ஏற்று வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் எல்லாமே ஏமாற்று வித்தைகளாகவே நீடித்துக் கொண்டிருப்பதையிட்டு பெரும் கவலையடைய வேண்டியுள்ளது. நேரடியாக எமது மண்ணுக்கு வந்தே ஜன சமுத்திரத்தின் மத்தியில் நாட்டின் பிரதமரும் உள்ளூராட்சி அமைச்சரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் அவை கூட செயலுறுத்தப்படவில்லை என்றால் தடைகளும் கழுத்தறுப்புகளும் துரோகங்களும் எங்கே இருக்கின்றன என்பதை எம்மால் உணர முடியாமல் இல்லை.

நுவரெலியாவில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அமைச்சர் மனோ கணேசன் கடந்த மூன்று மாதங்கள் தொடக்கம்தான் ஈடுபட்டிருந்தார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவருக்கின்ற பேரம் பேசும் சக்தியை பிரதமருடன் மோதுகின்ற அளவுக்கு முழுமையாக பயன்படுத்தி, வெற்றி கண்டுள்ளார். அடுத்த ஒரு சில தினங்களில் அந்த புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிப்படவுள்ளன. அதுவரை உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் மனோ கணேசனின் அரசியல் பலம் எங்கே? நம்மவர்களின் அரசியல் பலம் எங்கே? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நுவரெலியாவுக்காக மனோ கணேசன் குரல் எழுப்புவது போன்று, நமது சாய்ந்தமருத்துக்காக கொஞ்சமாவது உளத்தூய்மையுடன் பேசுகின்ற அதிகார அரசியல்வாதிகள் யார்தான் உள்ளனர். ஆகவே அவர்களை முழுமையாக நம்பி, அடுத்த சந்ததிக்கு கூட நாம் துரோகமிழைத்து விட்டு செல்லப்போகின்றோமா என்பதை சிந்திக்கின்ற தருணம்தான் இது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் நமது பாரம்பரிய, பழைமை வாய்ந்த சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் அரசியல் கட்சிகளை புறக்கணித்து விட்டு, நமது பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து  சுயேச்சை அணியாக களமிறங்க வேண்டும் என சாய்ந்தமருது ஷூரா சபை முன்வைத்துள்ள முன்மொழிவை எல்லோரும் ஏற்று அமுல்நடத்த முன்வருவதன் மூலமே எமது உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்துகின்றேன்.  

ஊரின் நீண்ட கால அபிலாஷையை வென்றெடுப்பதை இலக்காக கொண்டு, இப்படியொரு பொதுச் சுயேச்சை அணி களமிறங்கும்போது யார் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக களமிறங்குவார்களோ அவர்கள்தான் இந்த ஊரின் வரலாற்றுத் துரோகிகள் என்பதை ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

இப்படி தமது சுயநலன்களுக்காக, ஊரைக்காட்டிக் கொடுக்கின்ற கோடாரிக்காம்புகளை மக்கள் புறக்கணிப்பதற்கு ஒருபோதும் பின்னிற்கக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்" என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் குறிப்பிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment