பிரதான செய்திகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் பலத்த சேதம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இர்மா சூறாவளி கடுமையாக தாக்கியதனால் அந்த மாகாணம் முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.

கரீபியன் தீவுகளை சூறையாடிய இர்மா சூறாவளி நேற்று முன்தினம் (11) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. அப்போது மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இடைவிடாது பலத்த மழை பெய்ததன்காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி உடைந்தன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகீழாக புரட்டப்பட்டன. கட்டுமான தளங்களில் ராட்சத கிரேன்களும் முறிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா மாகாணம் முழுவதும் 70 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மாகாணம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கானோர் தஞ்சமடைந்தனர். சூறாவளி தாக்கிய புளோரிடா கீஸ், மியாமி உட்பட புளோரிடா மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது.

சுமார் 35 மணி நேரம் சுழன்றடித்த சூறாவளி படிப்படியாக வலுவிழந்தது. தற்போது அந்த சூறாவளி புளோரிடா வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இர்மா சூறாவளி தாக்கிய போது 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. தற்போது அது வலுவிழந்தாலும் கடல் இன்னமும் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. எனவே செவ்வாய்க்கிழமை வரை மியாமி உள்ளிட்ட கடற்கரை சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என புளோரிடா மாகாண அரசு எச்சரித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வி புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து இர்மா சூறாவளி புளோரிடா மாகாணத்தை சூறையாடியுள்ளது. இரு மாகாணங்களிலும் ஒட்டுமொத்தமாக ரூ.6.4 இலட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்க பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இர்மா சூறாவளி காரணமாக பலர் வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்த வீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கடைகளையும் சமூக விரோதிகள் சூறையாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment