பிரதான செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கு ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வகையில் ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களை விருப்பத்தினடிப்படையில் கடமைக்கு சமுகமளிக்குமாறும் மின்சக்தி அமைச்சு விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக ஓய்வுபெற்ற தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய மற்றும் சாரதிகளை தற்காலிகமாக சேவைக்கு அமர்த்துவதற்கே அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, சேவையில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் தாங்கள் ஆரம்பத்தில் கடமைபுரிந்த இடங்களுக்கே மீண்டும் சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் உடனடியாக வேலைக்கு சமுகமளிக்குமாறும் இல்லையேல் ஒப்பந்தம் மற்றும் சமயாசமய அடிப்படையில் பணிபுரிவோர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதப்படுவரென்றும் இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் 55 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கும் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கடமைக்கு சமுகமளிக்குமாறும் மின்சார சபையின் பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் கல்கிஸ்சை மற்றும் பிலியந்தலை பகுதிகளிலும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மின்விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த சில ஊழியர்களின் நாசவேலை மற்றும் கடும் மழை ஆகியன காரணமாகவே இந்த மின்வெட்டு இடம்பெற்றிருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.நாச வேலைகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் குறிபிப்பிட்டார்.

எவ்வித தடைகள் வந்தாலும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலை நிறுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை இரவு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டியவுடன் பேச்சு நடத்தியபொதும் அது வெற்றியளிக்கவில்லையென்றும் நியாயமான தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடருமென்றும் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். 

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment