(கே.ஏ.ஹமீட்)
அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கடந்த 30 வருட காலமாக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் நலனுக்காக தற்காலிக தீர்வாக 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்;தம் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக நமது நாட்டிலே மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது.
13வது திருத்த சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் மத்திய அரசாங்கத்திடம் வழங்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
“காலம் கழியும் உண்மை ஒளிறும்” என்ற தலைப்பில் சம்மாந்துறை பிரதான வீதியில் தேசிய காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி ஆஸிக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
பெரும் தலைவர் எம்;.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அன்று பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டு இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் அரசியல் விடுதலை பயணத்தை மேற்கொண்டார்.
தலைவர் அஷ்ரப் அவர்களுடைய அரசியல் விடுதலை பயணத்தை இல்லாமல் செய்வதற்கு அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். பல சந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப் அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடைகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் மேற்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தங்களது உயிர்களை துச்சமென மதித்து தலைவர் அஷ்ரப் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசியலில் தேர்தல் காலங்களில் மாத்திரம் கரிவேப்பிலையாக பாவிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய அரசியல் பயணத்தின் காரணமாக நமது நாட்டில் ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்கும், ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும் முஸ்லிம் சமூகம் பேரம் பேசும் சக்தியாக மாற்றப்பட்டது.
முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் குர்ஆன், ஹதீஸ் என்பவைகளை யாப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ் பேசும் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் அதிகாரங்களை வேரோடு அறுத்து மத்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு பகிரங்கமாகவே செயல்படுவது குறித்து கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் கவலைப்பட வேண்டியுள்ளது.
நமது நாட்டில் அமைந்துள்ள சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊவா மாகாண சபையும், தென் மாகாண சபையும் 20வது திருத்தத்தை தோற்கடித்துள்ளது, வட மாகாண சபை 20வது திருத்தத்தை நிராகரித்துள்ளது, மேல் மாகாண சபையும், சப்ரகமுவ மாகாண சபையும் 20வது திருத்தத்தை ஒத்திவைத்துள்ள நிலையில் கிழக்கு மாகாண சபை இந்த சட்ட மூலத்தை இதுவரை நிராகரிக்காமல் இருப்பது குறித்து கிழக்கு மாகாண மக்கள் கவலையடைகின்றனர்.
கிழக்கு மாகாண சபையில் அங்கம் பெரும் அரசியல் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், வுஆஏ கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் 20வது திருத்த சட்ட மூலம் திருத்தப்படாத நிலையில் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டால் இச்சட்ட மூலத்தினை கிழக்கு மாகாண சபையில் தோற்கடிப்போம் என பகிரங்கமாக தெரிவித்த போதும் ஐக்கிய தேசியக் கட்சியும், கிழக்கு முதலமைச்சரும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்த சட்டத்தை சபையில் சமர்ப்பித்து இச்சட்ட மூலத்தை வெற்றி பெறுவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது குறித்து நாம் பெரும் ஆச்சரியம் அடைந்தோம். கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறி கடந்த 02வருட காலமாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகள் சீரழிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களுக்கு நீதியும், நியாயமும் முறையாக கிடைக்கவில்லை எனவும் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளால் தமிழ், முஸ்லிம் உறவுகள் சீர்கெட்டு போவதாகவும் இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இன்னும் விளங்காமல் உள்ளதாக அன்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மணோகனேசன் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் 2008ல் இருந்து 2015 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளால் சமூகங்களுக்கு இடையிலே நிலவிய இனவாத சிந்தனையை இல்லாமல் செய்து கிழக்கு மாகாண மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். 2015ல் இருந்து 2017வரை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை நிருவாகத்தினால் அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட இன ஐக்கியம் இல்லாமல் செய்யப்பட்டு இன்று பகிரங்கமாகவே மக்கள் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபையில் இன விகிதாசாரம் பேணப்படவில்லை என தெரிவிக்கும் நிலைமை உருவாகி உள்ளது எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment