மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளை ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும் அதனை நிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஐந்தாம் வட்டாரத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நான்காம் வட்டாரம், ஐந்தாம் வட்டாரம், எல்லை நகர் ஆகிய பகுதிகள் ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைப்பதை உடனடியாக நிறுத்துமாறு இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எமது கருத்துக்கு மதிப்பளிக்கவும், வைத்திய எல்லையை மாற்றாதே, பேச்சிலே இணக்கம் அரசியல் செயலிலே பிணக்கு அரசியல், எங்களது பகுதியை ஏறாவூர் நகருடன் இடமளியோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.
குறித்த கிராமங்களை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்துடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரும் மகஜர் ஒன்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிறிநாத்திடம் கையளிக்கப்பட்டது

0 comments:
Post a Comment