பிரதான செய்திகள்

கோணாவத்தை பொது நூலகத்திற்கு வாகனத் தரிப்பிடம்: பிரதேச சபை செயலாளர் இணக்கம்

(ஏ.எல்.றியாஸ்)

கோணாவத்தை பொது நூலகத்திற்கென தனியான வாகான தரிப்பிடமொன்று அமைப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம் பாயிஸ் இணக்கம் தெரிவித்துள்ளார். 

வாகான தரிப்பிட வசதியின்றி இயங்கிவரும் குறித்த நூலகத்திற்கு நாளாந்தம் வரும் வாசகர்களும், மாணவர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அதற்குரிய வாகான தரிப்பிடத்தினை உடன் அமைக்குமாறு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதேச சபை செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நேற்று (31) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இதன்போது கோணாவத்தை பொது நூலகத்திற்கென தனியான வாகான தரிப்பிடமின்மையினால் வாசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முன்மொழிவினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே உதுமாலெப்பை மேற்படி பணிப்புரை விடுத்தார்.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நெக்டப் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தினூடாக  கோணாவத்தை பொது நூலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல், அந்-நூர் மகா வித்தியாலயம், ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை என்பவற்றிக்கு மிக அண்மையில் உள்ள இந்த நூலகத்திற்கு நாளாந்தம் 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தருகின்றனர்.

இருந்த போதிலும் இந்நூலகத்திற்கு வருகைதரும் வாசகர்கள் தங்களது வாகனங்களை வீதியோரங்களிலே நிறுத்தி வைக்கவேண்டியுள்ளது. இதனால் வீதியினால் பயணிப்போர் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்துடன் வாசகர்கள் தங்களது துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் வகையில் கோணாவத்தை பொது நூலகத்திற்கு அருகாமையிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைக்குமாறு வாசகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment