முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் சந்திர குமார் வீரதுங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நிஷான் பெல்பிட்ட கோரளகே அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும் இன்று காலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகளுக்கான துணியினை (சீல் துணி) விநியோகித்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டதையடுத்தே இவ்வாறு தீர்பளிக்கப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கினார். கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தலா 20 இலட்சம் ரூபாவை அபராதம் செலுத்தவும் தலா 500 இலட்சம் ரூபாவை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு நட்டஈடாக வழங்கவும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.
நட்டஈட்டு தொகையினை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment