இந்தியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பதவியான பாதுகாப்புத்துறையானது நிர்மலா சீதாராமனுக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பானது இந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்போது 9 பேரை புதியதாக அமைச்சரவைக்கு மத்திய அரசு இணைத்துக்கொண்டது. பதவி ஏற்றவர்களில் ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் அமைச்சரவை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கனவே வகித்துவந்த பெற்றோலியத் துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொன். இராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை) பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும் ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment