பிரதான செய்திகள்

ரவுடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள்: விவரங்களை சேகரிக்க உத்தரவு

புதுச்சேரியில் ரவுடிகளின் அபகரிப்பில் உள்ளதாகக் கூறப்படும் இடங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார். ரவுடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விவரம், ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என காவல்துறை மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி, தட்டாஞ்சாவடியில் தங்களுடைய நிலங்களை அபகரித்து வைத்துள்ளதாக ஆளுநர் கிரண்பேடிக்கு சிலர் புகார் அளித்தனர். கடந்த 2007ஆம் ஆண்டு அந்த ரவுடி 42 மனைகளை விற்றுள்ளார். 

அடுத்த சில ஆண்டுகளில் அதன் மதிப்பு கூடியதும், அங்கு நிலங்களை வாங்கியவர்களை குடியேற விடாமல் மிரட்டி திரும்ப கேட்டதாகவும், தரமறுத்தவர்கள் மிரட்டப்பட்டதாகவும், வீடு கட்டியவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவராக சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பி ரத்தினவேலு, புதுச்சேரி அரசு ஊழியர் ஒருவர் ஆகியோர் கிரண்பேடியிடம் புகார் அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் நேற்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். காவல்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

‘10 ஆண்டுகளாக இந்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என கிரண்பேடி கேட்டதற்கு, கடந்த காலங்களில் அவர் அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்ததை சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் ஆளுநரிடம் விளக்கினார். “யார் தடுத்தாலும் புகார் தெரிவியுங்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆளுநர் உறுதியளித்தார். 

நிலம் வாங்கியவர்களிடம், “இது உங்கள் இடம். நீங்கள் இங்கு இருக்கலாம்’’ என்றும் ஆளுநர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது:

நில அபகரிப்பு தொடர்பாக புகார் வந்தது. அதன்பேரில் இங்கு ஆய்வு நடத்தியுள்ளேன். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் பட்டியல் குறித்து கேட்டுள்ளேன். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

அரசு ஊழியர்களின் தவறுகள் அவர்களது சேவை பதிவு புத்தகத்திலும் பதிவு செய்யப்படும். யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் ரவுடிகளுக்கு இடமில்லை. சட்டத்தின், நீதியின் ஆட்சிதான் இங்கு நடைபெற வேண்டும். ரவுடிகள் இருந்தால் எப்படி புதுச்சேரி அமைதியாக இருக்கும்? 

ரவுடிகள் தொடர்பான புகார்கள் வந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விவரம், ஆதாரங்களை சேகரிக்க சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சனுக்கு உத்தரவிட்டுள்ளேன். ரவுடிகளால் மிரட்டப்படுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment